பண்டாரவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நூதன இராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்டபகஷ பிரதிஷஸ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 01,02 மற்றும் 03ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களும் முருகப்பெருமான் உட்பட 16 விக்ரகங்களுக்கு எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் இன்று காலை ஆலய தீர்த்தகேனியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க அரோஹரா கோஷத்துடன் அடியார்கள் புடைசூழ கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தின் மூலம் மஹா கும்பாபிஷேக பெருச்சாந்தி பெருவிழா நடைபெற்றது.
யானை படை மற்றும் குதிரை படை ஊடாக ஆலயத்தின் திரு கதவு திறக்கப்பட்டு விசேட தீப ஆராதனைகளும் நடைபெற்றது.
பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் பிரதான குருக்கள் பால குகேஸ்வர குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பண்டாரவளை நகர மேயர் உட்பட பல்லாயிரக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், தொடர்ந்து 34 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.