இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது.
போட்டி நடைபெற்ற காலி சர்வதேச மைதானத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி, நான்காவது இன்னிங்ஸில் 268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி எட்டியதே சாதனையாக இருந்தது.
ஆனால், தற்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக 342 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களையும் மகேஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நசிம் ஷா மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 119 ஓட்டங்களையும் ரிஸ்வான் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ராஜித 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
4 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணி, 342 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நவாஸ் 5 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 342 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, போட்டியின் இறுதிநாளான நேற்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வரலாற்று வெற்றி பதிவுசெய்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அப்துல்லா ஷபீக் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களையும் பாபர் அசாம் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு துணை நின்ற அப்துல்லா ஷபீக் தெரிவுசெய்யப்பட்டார்.