எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR குறியீட்டு முறைமை நாளை முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் முழுமையாக QR குறியீட்டு முறைமை மாத்திரம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக QR முறைமையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.
தொழிநுட்ப ரீதியான சில விடயங்கள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், QR முறைமை தாமதமாவதன் காரணமாக எதிர்வரும் நாட்களுக்கு வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, நாளை முதல் ஞசு குறியீட்டு முறைமை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் வாகன இலக்கத்தகட்டின் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.