இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக தினமும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் துவிச்சக்கர வண்டி பாவனையினை முன்னெடுக்கச்செய்யும் வகையிலான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் வின்சன்ட் மகளிர் தேசிய உயர்பாடசாலை ஆகிய மாணவர்களினால் இன்று பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான துவிச்சக்கர வண்டி சவாரி நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் வின்சன்ட் மகளிர் தேசிய உயர்பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துகnhண்டனர்.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் துவிச்சக்கர வண்டி சவாரி நிகழ்வானது பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் எரிபொருளின் தட்டுப்பாடு,விலையேற்றம் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை அதிகளவாக பயன்படுத்தும் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களின் வரவும் இதன் காரணமாக குறைந்துவரும் நிலையில் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டியே சிறந்த தெரிவு என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த துவிச்சக்கர வண்டி சவாரி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.