அரசாங்கம் அமைக்கும் சர்வகட்சி எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பல கட்சிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ள போதும் கால வரையறை தொடர்பில் எவரிடமும் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்துக்காக குறுகிய காலத்துக்கு மட்டுமே ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் 6 மாதகாலத்திற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து, நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர், தேர்தலுக்கு செல்லவும் தீர்மானிக்கப்பட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் 3வருடங்களுக்கு தேர்தலை நடத்துப் போவதில்லை என தெரிவித்துள்ள நிலையில் சர்வகட்சி அரசாங்கம் குறித்து பாரிய சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.