வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்களால் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த சிலைக்கு முன்பாக ஒருங்கிணைந்து செல்லும் மன்னார் பிரதான வீதி மற்றும் எ9வீதி ஒன்றிணையும் பகுதிக்கு இன்றுமுதல் பண்டாரவன்னியன் சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் தமிழ்மணி அகளங்கனால் நினைவுரையும் நிகழ்தப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏனைய அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.