இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் பெயர்கள் பற்றிய விபரம் உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும், சர்வதேச சந்தையில் உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு, பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், அந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க உலக சுகாதாரம் அமைப்பு தயாராக உள்ளதாகவும் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் அத்தியவசிய சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தேவையான அவசர உதவிகளை வழங்குமாறு “உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார வேலைத்திட்டத்திற்கு” பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து அத்தியவசிய மருத்துவப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுகாதாரக் கட்டமைப்பின் செயல்திறன் மற்றும் தாங்கிக்கொள்ளும் திறன் உள்ளிட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், இலங்கையில் மாகாண சுகாதார சேவைகளை வலுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை உலக சுகாதார அமைப்பு வழங்குவதாகவும் வைத்தியர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் மேலும் தெரிவித்துள்ளார்.