பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், வெற்றி பெற்றால், அவரது அமைச்சரவையில் பணியாற்றப் போவதில்லை என முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலம், மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டேன். அத்தகைய சூழலில் நான் மீண்டும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என கூறினார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலின் இறுதிப் போட்டியாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் உள்ளனர்.
முன்னர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக் முதலிடத்தைப் பெற்றிருந்தாலும், கட்சி உறுப்பினர்களிடையே விரிவாக நடத்தப்படும் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் லிஸ் ட்ரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.