ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாக சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள டூவீட்டர் பதிவை மீள பெற வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மாணவர்கள், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே தமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று தெரிவித்தனர்.
மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ருவீட் செய்துள்ளார் என்றும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.
சீனத் தூதரகத்தின் குறித்த கருத்தானது இலங்கையில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் இதனால் தமிழ் மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ள சீனாவின் ஆதிக்கம் வடக்கு – கிழக்கில் அதிகரித்து வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இலங்கைக்கான சீன தூதரகம் தாங்கள் டுவிட்டரில் வெளியிட்ட உள்ளடக்கத்தை திரும்பப் பெறுமாறு சீனத் தூதரை மாணவர்கள் வலியுறுத்தினர்.
அதேநேரம், நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் தங்கள் அழைப்பை ஆதரிக்குமாறும் சீனாவை இவர்கள் கேட்டுக் கொண்டனர்.