தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இடைக்கால வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் இன்று(புதன்கிழமை) பங்கேற்று உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது எனவும், இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும் எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
காகத்தின் கூட்டில்தான் குயில் முட்டையிடும். சிறிதாக இருக்கும்போது, குயிலும் காகம்போல இருக்கும். வளர, வளரதான் பிரச்சினை ஆரம்பமாகும். குயில் விரட்டியடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மொட்டு கட்சி ஆட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு – செலவு திட்டமும் காகத்தின் கூட்டியில் குயில் முட்டை கதைபோல்தான். பாரிய ஆபத்து காத்திருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே அவரின் சில திட்டங்களுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்ட அவர், ஆனால் தருணம்வரும்போது வேலையைக் காட்டுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.