இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுலையில் இந்த கட்சியின் தலைமை அலுவலகத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றியபோதே வெல்கம இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மஹிந்த நல்லவர் என்றாலும் அவர் நாட்டைவிட குடும்பத்துக்கு நெருக்கமானவர்.
இல்லையேல் அவருக்கு கடந்த முறை சீனியாரிட்டி கொடுத்த நிலையில், இன்று வேறு யாராவது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள். இவ்வாறான சம்பவமும் அவருக்கு நடந்திருக்காது.
2 வருடங்களுக்குள்,கோட்டாபய ஜனாதிபதி பதவியை கைவிட்டு, இந்த நாட்டை விட்டு வெளியேறினார் என்று நான் நினைக்கிறேன். இப்போது அவர் வந்துவிட்டார். அவருக்கு நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் அங்கேயே இருங்கள். அரசியலுக்கு வராதீர்கள். ஏனென்றால் நீங்கள் அரசியலுக்கு தகுதியற்றவர். பிரதமர் பதவி தருவதாக சிலர் கூறுகின்றனர். அதைவிட உங்களுக்கு ஒரு நல்ல மனைவி இருக்கிறார். அவருடன் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும்.
மற்றவர்களின் ஏமாற்றங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நாங்களும் நாடாளுமன்றத்தில் இருக்கிறோம். எமது வாய் நன்றாக இல்லை. எங்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.