மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
ஆனால், அதைவிடப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் பிரிக்கப்படவில்லை. இதற்கு பா.ஜ.க.வின் சுயநல அரசியலே காரணம். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பொருளாதாரத்தை உயர்த்தி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைவாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ச்சியடையாத உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இரு மடங்கு அதிகமாக மக்களவை தொகுதியை அதிகரிப்பதும் எந்த வகையில் நியாயம்? இதையும் படியுங்கள்
தாம்பரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து எம்.பி. தொகுதிகளை உயர்த்துவது பாரபட்ச நடவடிக்கையாகும். அரசியல் லாபம் பெறவே உத்தரப்பிரதேசத்தில் எம்.பி. தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி சதவிகித அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதே சதவிகித அடிப்படையில் ஒவ்வொரு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டுமே தவிர, ஒவ்வொரு மாநில மக்கள் தொகை உயர்வின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மத்திய அரசின் கொள்கையின்படி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்ததற்காக தண்டிக்கிற வகையில் மத்திய அரசின் அணுகு முறை இருக்கக் கூடாது.
எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மக்களவை தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.