புத்தளம் மாவட்டம் நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையம், இலங்கை மக்களுக்கான மின்சாரத் தேவையை முழுமையாக வழங்க முடியாத நிலைமையில் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கின்றது.
சீனாவின் எக்ஸின் வங்கியின் 455 அமெரிக்க இலகு கடனைக் கொண்டு 2007ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகின.
குறைந்த விலையில் கிடைக்கும் நிலக்கரியைக் கொண்டு இதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
900 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய 3 அனல் மின்நிலையங்களை அமைப்பதே நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான திட்டம் என்றும் 3 கட்டப் பணிகளும் பூர்த்தியடைந்து முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமாயின் இலங்கையின் மின் உற்பத்திக்கு ஏற்படும் செலவீனத்தை பல மில்லியன் ரூபாகளால் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன் குறைந்தளவு கட்டணத்தை செலுத்தி மின் அலகுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதே இத்திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது இந்த மின்நிலையத்தின் மூன்று பிரிவுகளும் இயங்கி வருகின்றபோது, நாட்டின் மின்வெட்டுத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
அதுமட்டுமன்றி இந்த மின்நிலையம் அடிக்கடி பழுதைந்து விடும் நிலைமையானது மணிக்கணக்கான மின்தடையை நாடாளாவிய ரீதியில் ஏற்படுத்தியும் விடுகின்றது.
இறுதியாக கடந்த மாத நடுப்பகுதியில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதற்தொகுதி செயலிழந்தமையால் இரண்டாவது தொகுதியும் நிறுத்த வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டன.
இதனால் 600 மெஹாவோல்ட் மின்சாரம் கிடைக்க முடியாத சூழல் ஏற்படவும், நாட்டில் மின்சார வெட்டுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டது. சுமார் ஒருவாரமளவிற்கு இந்த நிலைமைகள் நீடித்திருந்தது.
இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. நுரைச்சோலை அனல்மின்நிலையம் அடிக்கடி பழுதடைவதும், பின்னர் தேசிய மின்கட்டமைப்பில் தடைகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.
பாரிய நிதிச்செலவுடன் அமைக்கப்பட்ட இந்த அனல் மின்நிலையமானது, முழுமையான சேவையை முன்னெடுக்க முடியாது இன்னமும் திணறி வருகின்றமை வெளிப்படையானது.
இவ்வாறான நிலையில், இந்த மின் நிலையத்தினால் பிரதான மூன்று தாக்கங்கள் இன்னமும் தொடர்வதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
குறிப்பாக, சமூக, பொருளாதார சூழலியல் தாக்கங்களுக்கு அப்பகுதி மக்கள் உள்ளாகிவருகின்றார்கள். இவ்விதமான நிலைமைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
அனல் மின்நிலைய அபிவிருத்தியால் ஏற்பட்டு வருகின்ற சமூகவியல் ரீதியான தாக்கங்களும் அது எவ்வாறு ஏற்பட்டு வருகின்றன என்பது தொடர்பாகவும ஆய்வினூடாக ஆராயும் போது 80சதவீதமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
95 ஹெக்டயர் காணி இழப்பு ஏற்பட்டது. அனல் மின்நிலையத்திலிருந்து வெளியாகும் ஆசனிக் குடிநீரில் கலப்பதால் குடிநீர் பாதிப்படைகின்றது. இதனால் 90சதவீத மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிவிடப்படும் நச்சு வாயுக்கள் தூசு துணிக்கைகள் சாம்பல் என்பவற்றால் கருவுற்ற பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது.
வெளிவிடப்படும் மெகாரி, கட்மியம் லெக் என்பன மனிதனுடைய சுவாசத்தொகுதியை நேரடியாக தாக்குகின்றமையால் காசநோய், ஆஸ்மா நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல சுவாச நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
அனல் மின்நிலையக் கழிவுகள் மனிதனது நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை தெரியவந்ததுள்ளது.
100 மெகாவாற் திறனுள்ள ஒரு நிலக்கரி அனல் மின் நிலைய உற்பத்தி நிலையம் 25 பவுண்ட் அல்லது 11.33 நச்சுப் பொருளான பாதரசத்தை ஆண்டுதோறும் வெளியேற்றுகின்றது.
இவ்வாறு வெளிப்படும் பாதரசம் கடலோடு கலப்பதால் இதனை மீன்கள் உட்கொள்கின்றன. அம்மீன்களை உட்கொள்ளும் மக்கள் பாதிப்படைகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களில் வளரும் சிசுக்களின் மூளைகளில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை தெரியவந்தது.
குடிநீரில் கலக்கும் ஆசனிக்கை அறியாத மக்கள் அதை குடிப்பதால் தோல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பவற்றை உருவாக்குவதிலும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.
வெளிவிடப்படும் சல்பர் ஒக்ஸைட் நைட்ரஜன் ஒக்சைட் போன்றவற்றால் உடல் நலம் சிதைக்கப்படுகின்றது. வெளியாகும் சப்தத்தினால் உடல் நலக் கோளாறுகளும் அழற்சியும் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறான சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை ஆய்வினூடாக தெரியவந்துள்ளதோ மேலும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றமையும் ஆய்வினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விளைவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையம் அதற்கான தீர்வுகளை தற்போது வரையில் வழங்கியதாக தரவுகளோ தகவல்களோ இல்லை.
இந்த நிலையில், இந்த மின்நிலையம் இலங்கை மக்களின் விடிவை வழங்காத மேலும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றதொன்றாகவே கொள்ள வேண்டியதை அதன் செயற்பாடுகளே உறுதிப்படுத்தியுள்ளது.