இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பான செயற்திட்டத்தின் ஊடாக இளையோர்கள் மத்தியில் இன நல்லிணக்கம் சார்ந்து அவர்களுடைய பங்களிப்பினையும், ஒத்துழைப்பினையும் மேம்படுத்துவதற்கான நிகழ்வினை அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் இளைஞர்கள் மற்றும் சமய, சமூக தலைவர்களையும் உள்வாங்கியதான சமாதானம், சகவாழ்வு தொடர்பாக இரண்டுநாள் செயலமர்வு நேற்றும் இன்றும் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் நடைபெற்றது.
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் மத்திய செயற் குழு தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அனுசியா சேனாதிராஜா மற்றும் திட்ட இணைப்பாளர் நடராஜா சுமந்தி, திட்ட பொறுப்பாளர் செல்வபதி கங்கேஸ்ரி ஆகியோரின் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட செயலமர்வில் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பொத்துவில் இறக்காமம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த தமிழ்,சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மற்றும் சமய சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளராக கனகசபை வன்னிரமா கலந்து கொண்டு பயற்சியினை வழங்கி வைத்ததுடன் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளராக ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்; குலசேகரம் கலந்து கொண்டார்.
எதிர் காலத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல், முரண்பாடுகளை அடையாளம் காணுதல்; அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல் எதிர்காலத்திற்கு தேவையான தலைமைத்துவங்களை உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இச்செயற்பாடுகளானது எதிர்காலத்திலும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.