2ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவான தூதுக்குழுவுடன் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கவலை வெளியிட்டார்.
அதேசமயம் தேவையற்ற செலவுகளை குறைக்க மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகளை மட்டுமே அவர் அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் பத்து பிரதிநிதிகளுடன் பிரித்தானியாவிற்கு சென்றதாகவும் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகளை மட்டுமே அவர் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட ஒரு பெரிய குழுவொன்று அவருடன் சென்றது. இதேபோன்ற நடைமுறையை கடைப்பிடித்ததன் விளைவாகவே நாங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்” என அவர் மேலும் கூறினார்.