காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகிறது. இந்நிலையில், செப். 30ஆம் திகதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு மீதான பரிசீலனை ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.