இந்தியாவுடனான தீவு தேசத்தின் உறவுகள் தொடர்பான மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கள் குறித்து இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிடுகையில், ‘சீனா நெருங்கிய நட்பு நாடு’ ஆனால் இந்தியா எங்கள் ‘சகோதர சகோதரி’ என குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பானவை என்று விவரித்த மொரகொட, இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்கள் சொந்த பாதுகாப்பு நலன்கள் போன்றவை என்றும் கூறினார்.
ராஜபக்ஷ எப்போதும் சீனா மிக மிக நெருங்கிய நட்பு நாடு, ஆனால் இந்தியா எங்கள் சகோதர சகோதரி என்று கூறுவார். குடும்பத்தில் சண்டைகள் வரலாம் ஆனால் கடைசியில் அது எங்கள் குடும்பம் தான் என்று அவர் குறிப்பிட்டார்.
இராமாயணம் முதல் பௌத்தம் வரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நீண்ட வரலாற்று உறவு உள்ளது. சீதாவும் சங்கமித்தமும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளனர்.
எங்கள் உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உறவு கண்டிப்பாக சமச்சீரற்றது ஆனால் அவை சிறப்பானவை என்று அவர் கூறினார்.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக உதவும் இந்தியாவின் முயற்சிகளை வெகுவாக பாராட்டிய உயர்ஸ்தானிகர், இந்தியாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு முழுவதும் யாரும் முன்வராதபோது இந்தியா எங்களுக்கு உதவி மற்றும் உதவிகளை வழங்கியது. இந்தியா எங்களுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற வளர்ச்சி பங்காளிகளுடன் ஆதரவாக உரையாடி எங்களை ஆதரிப்பதற்கு அந்த தரப்புக்களை ஊக்குவித்துள்ளது என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அரசியல்ஸ்திரமின்மைக்கு மத்தியில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தியமை பற்றிக் குறிப்பிட்ட அவர், சீனக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஐ நிறுத்துவதற்கு அனுமதிப்பது என்பது குழப்பமான நேரத்தில் ‘அதிகாரிகள்’ மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார்.
புவிசார் அரசியல் பதட்டங்களில் ‘ஆபத்தான கட்டத்திற்கு’ பதிலளிக்கும் வகையில் சிறிய நாடுகள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்.
‘இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்கள் சொந்த பாதுகாப்பு நலன்கள். புரிந்துகொள்வது என்று ஜனாதிபதி சமீபத்தில் தெளிவுபடுத்தினார். அதை நாங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பது ஒரு கேள்வி. இது ஒரு செயல்முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், இந்தியாவுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
மேலும் நாங்கள் ஒரு ஒத்துழைப்பு கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும், நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கிறோம், என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த மாதம், இலங்கைக்கான சீனத் தூதுவர், இந்தியாவைப் பற்றிய மறைமுகக் குறிப்பில், இலங்கையின் இறையாண்மையில் ‘முழுமையான தலையீடு’ என்று குற்றம் சுமத்தி, ‘வடக்கு அண்டை நாடு’ ஆக்கிரமிப்பு வரலாறைக் கொண்டது என்று அழைத்ததை புதுடில்லி கடுமையாகத் விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய மீனவர் பிரச்சினை குறித்து மேலும் பேசிய உயர்ஸ்தானிகர், இது ஒரு சிக்கலான பிரச்சினை என்றும், அதற்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
நான் தமிழக முதலமைச்சரை சந்தித்தேன். நாங்கள் தீர்வு காண வேண்டும், ஆனால் இது ஒரு சிக்கலான பிரச்சினை. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இதை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் வைத்திருக்க முயற்சிக்கிறோம்,’ என்று அவர் கூறினார்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.