யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 6ஆம், 7ஆம் , மற்றும் 8ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2ஆயிரத்து 378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
அது தொடர்பில் விளக்கமளிக்கையில், இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாட்களும் முறையே மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் முறையே இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 185 பேர் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர்.அவர்களில் கலாநிதிப் பட்டத்தை இரண்டுபேரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை பதினொரு பேரும், சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஆறு பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை ஒருவரும் முதுவியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை ஏழு பேரும், கல்வியியலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை 157 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழினை ஒருவரும் பெறவிருக்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு வழமைபோன்று பட்டம் பெறும் மாணவர்களுடன், பெற்றோரும் கலந்துகொள்ள வசதியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டம் பெறுகின்ற மாணவர்கள், மற்றும் விருந்தினர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விநயமாகக் கேட்டுகொள்கின்றோம்.
விழா மண்டபத்தினுள் பட்டதாரிகள், அழைக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடியோ மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை.
பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்கள் சார்பாக அனுமதிக்கப்பட்ட விருந்தினர்கள் புகைப்படம் எடுத்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் எமது பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் வாயிலாகவும், முகப்புத்தகம், யூடியூப் சனல்களின் ஊடாகவும் நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டமளிப்பு விழா சுமுகமாக நிறைவுபெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறோம் என்றார்.