21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், இந்த விரதத்திற்கான காப்பு காட்டும் நிகழ்வில், முதல் பூ போடும் நிகழ்வு நேற்று சுமார் 2000க்கு அதிகமான அடியவர்களுடன் ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து அடியார்கள் புடை சூழ வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக சிவன் மற்றும் அம்பாளுக்கு தீபாராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.
சிவபெருமானுடைய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவரராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்கலகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.