சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய உரையின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் கூறுகையில்,
‘இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்துள்ளோம்.
மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ளபோதும், அதற்கு செலுத்துவதற்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.
இந்த கப்பலுக்கான அன்னிய செலாவணியை மத்திய வங்கி ஒதுக்கியதும், குறித்த கப்பலின் எண்ணெய் இறக்கப்பட்டு, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்படும். இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது’ என கூறினார்.