கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட வீட்டுத்திட்டங்களை விரைவாக முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
திறைசேரிக்கு சுமை ஏற்படாமல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு மாற்று வழிகளை கண்டறியுமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடனுதவியுடன் 5500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில் 4074 அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் சீனா வழங்கிய 552 மில்லியன் யுவான் தொகையைப் பயன்படுத்தி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் திட்டத்தின் கீழ் பேலியகொட, மொரட்டுவ, தெமட்டகொட, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் 2000 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச மற்றும் தனியார் பங்காளிபின் கீழ் குறைந்த வசதி கொண்ட வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.














