மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகுதி பாரம்பரிய நெல் விதைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் மடு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் விதைப்புக்கு தயாரான நிலையில் இருந்த தெரிவு செய்யப்பட்ட 16 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா 50 கிலோ சுத்திகரிக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே செயற்திட்டத்தின் ஊடாக பெறப்பட்ட விளைச்சல் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட விதை நெல்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு மன்னார் நெல் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்த படுத்திருந்த நிலையில் புதிய பயனாளர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டது.
இம் முறை தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு கிடைக்கும் விளைச்சலில் மற்றும் ஒரு பயனாளருக்கு ஐம்பது கிலோ விதை நெல் வழங்கப்படவுள்ளது.
குறித்த விதைகள் வழங்கும் நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் நிஜாகரன் மற்றும் மெசிடோ நிறுவன குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ ஆகியோர் இணைந்து பயனாளர்களுக்கான நெல் மூடைகளை வைபவரீதியாக வழங்கி வைத்தனர்.
குறித்த செயற்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி சுமார் 120 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு நபர் ஒருவருக்கு 50 கிலோ பாரம்பரிய விதைகள் வழங்கி வைக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.