இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் மற்றும், கலட்டை குஞ்சு பாரமரிக்கும் நிலையங்களை நவீன முறையில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருந்தனர்.
இந்நிலையில், நக்டா நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் செயற்படுத்தப்படுகின்ற, ஓலைத்தொடுவாய் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்திற்கும் இந்திய முதலீட்டாளர்களின் தொழில்நுட்பங்களை உள்வாங்கி, அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க விரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முதலீட்டாளர்களை இன்று ஓலைத்தொடுவாய் குஞ்சு கருத்தரிப்பு நிலையத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலில், கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் மற்றும் குஞ்சு பராமரிக்கும் நிலையம் போன்றவற்றிற்கான இந்திய தனியார் முதலீட்டாளர்களின் அனுபவத்தினையும் நவீன தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், பிரதேச மக்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை மன்னாரில் கோந்தைப்பிட்டி எனும் இடத்தில் உள்ள இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை பயன்படுத்துவதற்கு இரண்டு சமூகங்கள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில், மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தி, நிரந்தரமான தீர்வினை சுமூகமாக அமுல்ப்படுத்துவதற்கு, சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.