இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனுதவியின் கீழ் மருத்துவத்துறைக்கு என ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் டொலர்களில் 50 மில்லியனை இலங்கை பயன்படுத்தவில்லை என அறிய முடிகின்றது.
சுகாதாரத்துறைக்கு இதுவரை வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் சுமார் 60 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சின் கீழ் இல்லாத சில நிறுவங்களுக்கு டெண்டர்களை விடுப்பதில் உள்ள சிக்கலான செயல்முறை குறித்து இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட இந்திய கடன் தொகையானது அரச மருந்துப் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC), அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் தனியார் துறை உட்பட அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களிடையே மட்டுமே விநியோகிக்க முடியும்.
சில டெண்டர்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக் காண ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.