மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தி துறையினை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்லும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு தினம் மற்றும் உலக வறுமையொழிப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அமைப்புகளுடனான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில்,விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில்,விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் தொழில்துறைகளுடன் இணைக்கும் நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் எம்.அருளானந்தம் உட்பட பொது அமைப்புகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொருளாதார நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களையும்கொண்ட மாகாணமாக உள்ளபோதிலும் உற்பத்தி துறை மிகவும் மந்தகதியில் உள்ளமை தொடர்பிலும் இங்கிருந்து ஏற்றுமதிக்கான பொருளாதாரத்தினை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பினை உருவாக்குவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக விவசாயத்தின் மூலம் இலங்கையில் நெல் உற்பத்தியில் மூன்றாவது மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ளபோதிலும் விவசாயிகள் நெல் உற்பத்தியில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தினை பயன்படுத்தி மட்டக்களப்பில் உற்பத்தி துறையினை மேம்படுத்துவதற்கு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எதிர்காலத்தில் அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து கட்டமைப்பு உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.