பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று (செவ்வாய்கிழமை) பதவியேற்றார்.
இதன்மூலம், பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகவும், 200 ஆண்டுகளுக்கும் மேலான இளைய பிரதமர் என்ற பெருமையையும் சுனக் பெற்றார். அவர் இந்த ஆண்டு மூன்றாவது பிரதமர் ஆவார்.
பொரிஸ் ஜோன்சனனின் பதவி விலகலுக்கு பிறகு அண்மையில் லிஸ் ட்ரஸ், புதிய பிரதமராக பதவியேற்றார்.
எரிவாயுக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் பதவியேற்ற ட்ரஸ், பல்வேறு வரிச் சலுகை அறிவித்தார். இது கடந்த மாதம் தாக்கல் செய்த மினி வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.
இந்த வரவு செலவுத்திட்டம் எதிரொலியாக டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, அவர் கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார்.
தற்போது, அதே நிதிக் கொந்தளிப்புடன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.