ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
22 வயதான மாஷா அமீனியின் சொந்த ஊரான சாக்வெஸில் நினைவிடத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரர்களுடன் ஈரானிய பாதுகாப்புப் படைகள் மோதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
‘செஹெலோம்’ என்று அழைக்கப்படும் ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்த நாளிலிருந்து 40வது நாள், ஈரானில் கலாச்சார முக்கியத்துவத்தையும், ஷியா முஸ்லீம்களுக்கு மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
புதன்கிழமை, சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள், அமினி அடக்கம் செய்யப்பட்ட சாக்கஸில் உள்ள ஆய்ச்சி கல்லறையை நோக்கி பெரும் கூட்டம் அணிவகுத்துச் செல்வதைக் காட்டியது.
கூடியிருந்தவர்களில் மற்ற நகரங்களில் இருந்து வந்து குவிந்தவர்களும் ஆயிரக்கணக்கில் காணப்பட்டனர். பலர் ‘பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ மற்றும் ‘சுதந்திரம், சுதந்திரம்’ என்று கோஷமிட்டனர், ஈரான் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும், நாட்டிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒற்றுமைப் போராட்டங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முழக்கங்கள் இதுவாகும்.
ஈரானில் கலாசார காவலர்களால் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குர்து இனத்தைச் சேர்ந்த மாஷா அமீனி கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவர், பின்னர் உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக அமீனி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தாலும், கலாசார காவலர்கள் தாக்கியதால்தான் அவர உயிரிழந்ததாக அமீனியின் பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாபை அகற்றியும் தலைமுடியை கத்தரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.