கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின்போது, மீண்டும் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற முடியும் என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு செல்லுபடியாகும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து ஏதேனும் தொகை நிலுவையில் இருப்பின், அதனை சட்டரீதியாக வெளியேறுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காததைத் தவிர வேறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பிலான காலவரையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அல்லது வெளிநாட்டுப் பயணத்தின்போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மோசடியான முறையில் தயாரித்தவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதை குடிவரவுத் திணைக்களம் உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.