பூனாகலை அம்பட்டிக்கந்த பகுதியில் தொழிலாளி ஒருவர் யானைதாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இதுதொடர்பில் வனவளத்துறைக்கு பலமுறை அறிவித்துள்ளதாகவும் போதுமான நடவடிக்கைகளை வனவளத்துறையினர் எடுத்திருக்கவில்லை என அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், பசும்பால் கொண்டுசென்ற தொழிலாளி ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனவளத்துறையினர் இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கான முழுமையான பொறுப்பை வனவளத்துறையினர் ஏற்க வேண்டும். மக்களின் முறைப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தால் தொழிலாளி ஒருவரின் உயிர் பறிபோயிருக்காது. தோட்ட நிர்வாகமும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
வனவளத்துறையின் அலட்சியத்தை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக இங்குள்ள மக்களின் பாதுகாப்பை கருதி மக்கள் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் பகுதிகளுக்குள் யானைகளின் வருகையை கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வனவளத்துறை காரியாலயம் சுற்றிவளைக்கப்பட்டு, வனவளத்துறையினருக்கு எதிராக பாரிய போராட்டங்களை செய்வதற்கு இ.தொ.கா தயாராக உள்ளது.
மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.