2023ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 7 நாட்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில், இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதன்பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை ஆரம்பமாகி டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்பட்டு அன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளது.
அந்த கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று கூடியபோது இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான கட்சியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தனது முடிவு குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.