மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் நெதகமுவே விஜய மைத்திரி தேரர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
இதன்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அத்தோடு, மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, ‘ஒரே திசை – ஒரே பாதை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகமும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், வட்டினாபஹ சோமானந்த மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, இராஜாங்க அமைச்சர்களான டி.பி. ஹேரத், இந்திக அனுருத்த, ஷஷேந்திர ராஜபக்ஷ, ஜானக வக்கும்புர, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, எஸ்.எம். சந்திரசேன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.