விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் குழுக்களாக பிரிந்து கல்முனை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாக செல்வது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.
மேலும் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று நீதிமன்றங்களில் அதிகளவான போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் தொடரப்படுவதுடன் போக்குவரத்து விதி மீறலினால் பெறுமதியான உயிர்களும் பலியாகின்ற சந்தர்ப்பங்களும் உடல் அவயங்களும் இழந்து காணப்படுகின்ற நிலைமையும் இப்பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 100 க்கும் மேற்பட்டோருக்கு மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர பொதுப்போக்குவரத்து தனியார் போக்குவரத்து வாகனங்கள் உரிய பராமரிப்பு இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவதும் திடீர் விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன.