இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் தொகுதியின் குடியிருப்போர் குழுவின் ஒரு பகுதியாக குழுவின் துணைத் தலைவரான லூசியானா சியோர்பா உள்ளிட்ட குழுவினர், ஃபிடன் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட போதே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக, இத்தாலியின் லா ரிபப்ளிகா செய்தித்தாள் தெரிவிக்கிறது.
காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என நம்பப்படுகிறது, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை வன்முறையின் கடுமையான அத்தியாயம் என ரோம் நகர மேயர் ராபர்டோ குவால்டியேரி விபரித்தார். மேலும், இன்று (திங்கட்கிழமை) அவசர கூட்டத்தில் கலந்து கொள்வதாக கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 57 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிய பத்திரிகைகளால் பெயரிடப்பட்ட சந்தேக நபரின் உந்துதல் குறித்து பொலிஸார் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்தத் தாக்குதல் அரசியல் சார்ந்ததாகக் கருதப்படவில்லை.
சந்தேக நபருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர் குழுவிற்கும் சில காலமாக கடுமையான தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரை தனது தோழி நிகோலெட்டா கோலிசானோ என்று பெயரிட்டார். இறந்த மற்ற பெண்களின் பெயர் எலிசபெட்டா சிலென்சி மற்றும் சபீனா ஸ்பெராண்டியோ ஆகும்.
இத்தாலியின் தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் தலைவரான ஜியோர்ஜியா மெலோனி, கடந்த ஒக்டோபரில் நாட்டின் முதல் பெண் பிரதமரானார்.