சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
புது டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் இராணுவ வீரா்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
இந்திய ராணுவ வீரா்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் கல்வான் மற்றும் டோக்லாம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை என்றும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவைத் தாக்குவதே சீனாவின் உத்தி என்றும் அதற்காக சீனா தற்போது பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளும் திடீர் தாக்குதலை நடத்த தயாராகி வருகின்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்தும் மெளனமாக இருக்க கூடாது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.