ரஷ்ய துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் முன்னாள் தளபதி ஒருவர் கூலிப்படையை விட்டு வெளியேறிய பின்னர் நோர்வேயில் தஞ்சம் கோரியுள்ளார்.
26 வயதான ஆண்ட்ரி மெட்வெடேவ், கடந்த வெள்ளியன்று நோர்வே எல்லையைத் தாண்டிச் சென்றதாகவும் அங்கு அவர் எல்லைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் காரணங்களுக்காக அவர் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவரது வழக்கறிஞர் பிரைன்ஜுல்ஃப் ரிஸ்னெஸ் கூறினார்.
தற்போது ஒஸ்லோ பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், நோர்வேக்கு சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஃபின்மார்க்கின் நோர்வே பிராந்தியத்தின் பொலிஸ்துறைத் தலைவர் தர்ஜி சிர்மா-டெல்லெஃப்சென், எல்லைக் காவல் படையினரால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாகவும் கூறினார்.
ஆனால், மெட்வெடேவ், ரஷ்யாவை விட்டு வெளியேற உதவிய ரஷ்ய மனித உரிமைகள் குழுவான குலாகு, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது. அவர் தப்பிச் சென்றது குழுவின் வீரர்களில் ஒருவர் மேற்கு நோக்கிச் சென்ற முதல் அறியப்பட்ட நிகழ்வாக நம்பப்படுகிறது.
மெட்வடேவ் ரஷ்ய இராணுவத்தில் முன்னாள் சிப்பாய் என்றும், வாக்னர் குழுவில் சேருவதற்கு முன்பு 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர் சிறைவாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகின்றது.
அவர் உக்ரைனில் உள்ள ஒரு வாக்னர் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், அங்கு கூலிப்படை குழு அவருக்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 30-40 துருப்புக்களை வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.