உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஏதேனும் காரணங்களைக்கூறி அரசாங்கம் பிற்போட முயற்சிக்குமானால், மக்களுடன் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எல்லை நிர்ணய ஆணைக்குழுவை ஏன் ஸ்தாபித்தீர்கள்?
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைப்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில் ஏன் இதனை மேற்கொள்ள வேண்டும்?
தேர்தலை ஒத்திவைக்கவே இந்த முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து எமக்குத் தெரியாது.
பணம் அச்சிட அனுமதி வழங்கப்பட்டதாகவும் பொய்க்கூறுகிறார்கள். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர்வரை உயர் வட்டி வீதத்தில், 858 மில்லியன் ரூபாயை பெற்றுக் கொண்ட கடனுக்கான வட்டியாக அரசாங்கம் செலுத்தியுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த பணம் இல்லை எனக்கூறும் அரசாங்கத்திடம், இந்த வட்டியை செலுத்த மட்டும் எவ்வாறு பணம் கிடைத்தது?
ஜனாதிபதி மாளிகையை ஜயவர்த்தனபுர பகுதிக்கு மாற்றுவதற்கெல்லாம் எங்கே இருந்து பணம் கிடைத்தது?
தேர்தலை நடத்தினால், அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தவும், ஓய்வூதியம் வழங்கவும் பணம் இல்லாமல் போய்விடும் என அரசாங்கம் கூறுகிறது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், மின்சாரத்துண்டிப்பு நீடிக்கும், நெல்லைக் கொள்வனவு செய்ய முடியாது போய்விடும் என்றெல்லாம் பல கதைகள் கூறப்படுகின்றன.
முதுகெலும்புள்ள அமைச்சர்கள் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும். இப்படியே சென்றால் பொதுத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும்கூட நிறுத்தி வைக்கலாம்.
ஜனாதிபதி 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என ஒருபுறம் கூறிக்கொண்டு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட மறுபுறத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்பிற்கிணங்க, மக்களின் இறையான்மையை இல்லாது செய்ய யாருக்கும் எந்தவொரு அதிகாரமும் கிடையாது. இவ்வாறு செயற்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இதற்கெதிராக ஜனநாயக வழியில், மக்களுடன் வீதியில் இறங்கி போராட வேண்டியேற்படும் என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.