ஜசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், நியூஸிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அவர் அந்த ஆதரவைப் பெற்றால், ஆர்டெர்ன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் ஜெனரலுக்கு முறையாக வழங்குவார். பின்னர் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் சார்பாக பிரதமராக நியமிக்கப்படுவார்.
நியூஸிலாந்தில் ஒக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஹிப்கின்ஸ் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.
44 வயதான ஹிப்கின்ஸ், முதன்முதலில் 2008 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் நவம்பர் 2020 இல் கொவிட்-19 அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹிப்கின்ஸ், தற்போது பொலிஸ்துறை, கல்வி மற்றும் பொது சேவை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.