நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில், சிறு காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் அனைவரும் இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மஹேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.
இதில், மாணவர் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து மாணவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்தின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவா அல்லது இது இயந்திரக் கோளாறா? வேறு ஏதேனும் கோளாறா என்பது இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து, நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அடங்களாக 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.