தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தமைக்கு பொறுப்பானவர்களைக் கைது செய்யத் தவறியமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அத்தோடு மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்கியதற்காக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி பொலிஸ் மா அதிபருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், பொலிஸார் இதற்கு காரணமானவர்களைக் கைது செய்யத் தவறிவிட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு இத்தகைய சம்பவத்தை செய்திருந்தாலும் அத்தகைய குழுக்களுக்கு உள்நாட்டில் ஆதரவு உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவது, பொலிஸார் மீதும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெடுக்கும் என்றும் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
எனவே, உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.