தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில் பல்வேறு தரப்பினரும், தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் தேவையற்ற செல்வாக்கை செலுத்தி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதில் ஈடுபட வேண்டிய பல அரச நிறுவனங்களுடன் இணைந்த சில அரச அதிகாரிகள் தமது கடமைகளை புறக்கணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடமையை புறக்கணிக்கும் அரச அதிகாரிகளை நியமித்தவர்கள் கடமை தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் தலையிடுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்ஷிஹேவா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.