இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.
இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியை விட்டு விலகும் செய்தி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் நேற்று (திங்கட்கிழமை) ரசல் டொமிங்கோவிற்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளர் பெப்ரவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு இடையில் நியமிக்கப்படுவார் என்று கூறினார்.
அவர் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஹதுரசிங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.
பங்களாதேஷுக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டொமிங்கோ பதவி விலகும் போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி பயிற்சியாளராக இருந்தார். ஸ்டீவ் ரோட்ஸ் (2018 முதல் 2019 வரை) மற்றும் டொமிங்கோ (2019 முதல் 2022 வரை) ஹத்துருசிங்க இல்லாத காலப்பகுதியில் பயிற்சியாளராக இருந்தனர்.
கடந்த 2014 முதல் 2017ஆம் ஆண்டுகள் வரை பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இருந்த போது, பங்களாதேஷ் அணி சொந்த மண்ணில் பிரபலமான ஒருநாள் வெற்றிகளை பதிவுசெய்தது.
2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, அவர் அணியிலிருந்து வெளியேறி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவரது பொறுப்பின் கீழ் உலகக் கோப்பைக்கு முன்னதாக விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளில் 13இல் அணி தோல்வியடைந்தது. இது சர்வதேச தரவரிசையில் அவர்களை 8ஆவது இடத்திற்கு கொண்டு சென்றது. இதனால், அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.