தென்னாபிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற எஸ்.ஏ.20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலாவது சம்பியன் கிண்ணத்தை வென்றது.
ஜோகனர்ஸ்பர்க்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களையும் ரொஸ்சவ் மற்றும் நீஷம் ஆகியோர் தலா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பந்துவீச்சில், வான் டெர் மெர்வ் 4 விக்கெட்டுகளையும் மகலா மற்றும் பார்ட்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க்கோ ஜென்சன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று முதலாவது சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆடம் ரோசிங்டன் 56 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்க்ரம் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், நோக்கியா 2 விக்கெட்டுகளையும் போஸ்ச், அடில் ராஷித், கொலின் இங்ரம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக வான் டெர் மெர்வ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ஹெய்டன் மார்க்ரம் தெரிவுசெய்யப்பட்டார்.