முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும் ஏனைய காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் மற்றும் மாவட்டத்தின் நிலவும் ஏனைய காணிப்பிரச்சனைகளும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சனைகளுக்கான தீர்வுக்குரிய வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
குறிப்பாக மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து விடுவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகத்தின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அஜித் கீர்த்தி தென்னக்கோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் அது சார்ந்த நடவடிக்கைகளை துறைசார் அதிகாரிகள் மூலம் செயற்படுத்த பணித்தார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு .க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் திரு .எஸ்குணபாலன் (காணி), சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.