கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, 16ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்;டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், மே 28ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை, ஹமதாபாத், மொஹலி, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
லீக் போட்டிகள் மே 21ஆம் திகதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ஆம் தேதி ஹமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், டெல்லி, லக்னௌ ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் இதர நகரங்களிலும் விளையாடும் முறை இந்த ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி 10 அணிகளும் பாதி போட்டிகளை சொந்த மண்ணிலும் மீதி பாதி போட்டிகளை இதர நகரங்களிலும் விளையாடுகின்றன.
இதேவேளை, ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற மாற்று வீரருக்கு வாய்ப்பளிக்கும் புதிய விதிமுறை அமுலுக்கு வரவுள்ளது.
ஹமதாபாத்தில் நடைபெறும் ஆரம்ப போட்டியில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.