இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
வெலிங்டனில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரி புரூக் 186 ஓட்டங்களையும் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி மற்றும் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 209 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டிம் சவுத்தி 73 ஓட்டங்களையும் டொம் பிளெண்டல் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 226 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த நியூஸிலாந்து அணியை, இங்கிலாந்து அணி போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்படி போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 483 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 132 ஓட்டங்களையும் டொம் பிளெண்டல் 90 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜெக் லீச் 5 விக்கெட்டுகளையும் ரொபின்சன், பிரோட், ரூட் மற்றும் ஹரி புரூக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 256 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 95 ஓட்டங்களையும் பென் போக்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக ஹரி புரூக் தெரிவுசெய்யப்பட்டார்.