இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், திமுத் கருணாரத்ன 16 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணி 554 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
வெலிங்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 580 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 215 ஓட்டங்களையும் (ஆறாவது இரட்டை சதம்) ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காது 200 (முதல் இரட்டை சதம்) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் பிரபாத் ஜயசூரிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி நாளை தொடரவுள்ளது.