இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வெலிங்டனில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 580 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 416 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை அணியை நியூஸிலாந்து அணி, போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்படி போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 358 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்ரி நிக்கோல்ஸ் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியுசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, தலா மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.