இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிணையெடுப்புக்கான கடன் கிடைப்பதற்கான முயற்சி நெடியது.
அந்தப் பயணத்தில், இந்தியாவின் பங்களிப்பானது, மிகவும் கணிசமானதாக இருக்கின்றது என்பது புறக்கணிக்க முடியாத உண்மையாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற விசேட வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்றி வருகின்றார்.
இந்தக் கொள்கை இந்தியாவுக்கு எவ்வளவு தூரம் சாதகமான விடயங்களைப் பெற்றுக்கொடுத்ததோ தெரியவில்லை. ஆனால். இலங்கையைப் பொறுத்தவரையில் அது மிகவும் கனதியான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றது.
கொரோனாப் பரவல் மற்றும் தவறான கொள்கைகள் காரணமாக தீவு தேசமான இலங்கை பொருளாதார ரீதியாக சீரழிந்தது. இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழலை தோற்றுவித்தது.
இந்த நிலையில், இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடாத இந்தியா, நாட்டின் பொருளாதார மீட்சிக்காக முதன்முதலாக ஆதரவுக்கரம் நீட்டியது.
இந்தியாவின் அந்த ஆதரவுக்கரமே இலங்கை தற்போது சுவாசிப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது மறுதலிக்க முடியாத உண்மையாகின்றது.
முதன்முதலாக, இந்தியா, 2022ஆம் ஆண்டில், கொழும்பின் மோசமான பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்காக 4.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கொழும்பிற்கு உதவியாக வழங்கியது.
குறித்த நிதி உதவியை அளிப்பதற்கான தீர்மானத்தின் போது, அதனை மீளப்பெற்றுக்கொள்ளுவது உட்பட எந்தவொரு நிபந்தனையையும் இந்தியா விதித்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகின்றது.
இதனைத்தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் அதலபாதாளத்தில் உள்ள பொருளாதாரத்தினை மீட்பதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை மீளப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் எடுத்திருந்தது.
அதுபற்றிய உரையாடல்களை அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி முன்னெடுத்திருந்த தருணத்தில், இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாகவே, வொஷிங்டனுக்குச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அவர், இலங்கையின் பிரதிநிதிகளுடன் தானும் ஒருவராக பங்கேற்று அந்தக் கலந்துரையாடல்களுக்கு வெற்றிகரமான அங்குராட்பணத்தை ஏற்படுத்தினார். இது அடுத்தகட்ட மட்டங்களுக்குச் சென்று பணியாளர் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு வித்திட்டது.
எனினும், அதனையடுத்து இலங்கையின் இருதரப்பு பாரிய கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதங்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் இந்தியா முதலாவது தரப்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இறங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஜனவரி 16 அன்று புதுடில்லி தனது கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தலைவர்களுடனான தனது சந்திப்பின் போது, ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு பக்கபலமாக நிற்கிறது என்றும், தேவை ஏற்பட்டால் அடுத்தகட்டத்துக்குச் செல்லத் தயாராக இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு இந்தியாவினால் அனுப்பப்பட்ட கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தில், இந்தியாவின் நிதியமைச்சு, இலங்கையின் ஆழமான நீடிக்க முடியாத கடன் நிலைமையை ஒப்புக்கொண்டது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க கடனாளிகளுடன் மறுசீரமைப்பு பேச்சுக்களை முன்னெடுப்பதோடு, கொழும்பின் வருங்கால விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு அதன் வலுவான ஆதரவை உறுதிப்படுத்தியது.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா எழுதிய கடிதத்தில், முதிர்வு நீட்டிப்பு மற்றும் வட்டி விகிதக் குறைப்பு அல்லது வேறு ஏதேனும் நிதிக் கருவி மூலம் நடுத்தர முதல் நீண்ட கால கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பாரிஸ் கிளப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த உறுதி பூண்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு திட்டத்தின் கீழ் அந்நாட்டின் பொதுக்கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பிரெட்டன் வூட்ஸ் நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட திட்டத்திற்கு முழு நிதியுதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இலங்கைக்கு நிதியுதவி நிவாரணம் வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் புதுடில்லி தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கைக்கான நிதியுதவி; நிவாரணம் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிறிதொரு அறிவிப்பையும் செய்திருந்தது.
இதனையடுத்து, தொடர்ச்சியாக நாணயநிதியத்தின் உதவித்தொகை அறிவிக்கப்படும் வரையில் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கியது. அதுமட்டுமன்றி இந்திய முதலீட்டாளர்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு அனுப்புவதிலும் மத்திய அரசாங்கம் கணிசமான வகிபாகத்தைச் செய்து, இலங்கை மீண்டும் சரியான பொருளாதார பாதைக்கு திரும்புவதற்கு வித்திட்டிருக்கின்றது.