வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் திரண்ட மக்களோடு ஒப்பிடுகையில் நாவற் குழியில் புத்த விகாரையின் கலசத்தைத் திறப்பதற்காக பஸ்களில் வந்து இறங்கிய சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகமானது என ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.
ஒரு சிவனாலயம் சிதைக்கப்பட்டமை தமிழ் மக்களை ஒன்று திரட்டியுள்ளது என்பது உண்மை. ஆனால் அந்தத் திரட்சியைப் பேரெழுச்சியாக மாற்றத் தமிழ் கட்சிகளால் முடியவில்லை என்பதும் உண்மை. வெடுக்குநாறி மலை ஆலைய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அவசரமாக விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து வவுனியாவில் மக்கள் திரண்டார்கள்.
கட்சிப் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், சிவில் சமூகத்தவர்கள், பொதுமக்கள், இந்து மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்….. என்று பலதரப்பட்டவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.
கால அவகாசமெடுத்து, திட்டமிட்டுத் திரட்டப்பட்ட கூட்டம் அதுவல்ல.எனவே ஒப்பீட்டளவில் சனத்தொகை குறைவுதான். எனினும், அண்மை நாட்களாக நடந்துவரும் ஊர்வலங்களோடு ஒப்பிடுகையில், எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் வவுனியாவில் திரண்ட மக்களின் தொகை அதிகமானது.
அண்மை நாட்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மரபுரிமை ஆக்கிரமிப்பு மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக ஆங்காங்கே சிறிய அளவில் எதிர்ப்புகளைக் காட்டி வருகிறது.
ஆளுநரின் அலுவலகத்துக்கு முன்,நெடுந்தீவில்… என்று சொல்லி ஆங்காங்கே அக்கட்சியின் பிரமுகர்களும் ஆதரவாளர்களுமாக மொத்தம் 50க்கும் கூடாத தொகையினர் திரண்டு தமது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். இதுபோன்ற விடயங்களில் முதலில் எதிர்ப்பைக் காட்டுவதும் உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவதும் அக்கட்சிதான்.
ஆனால் அந்த எதிர்ப்பை ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளோடு இணைந்து பெருந்திரளான ஓர் எதிர்ப்பாக ஒழுங்கமைக்க அக்கட்சி விரும்பவில்லை என்றே தெரிகிறது.
இது போன்ற போராட்டங்களை முதலில் முன்னெடுப்பது தாங்களே என்று காட்டி அதன்மூலம் தமது கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பெருக்கிக் கொள்வதே அவர்களுடைய நோக்கமாகக் காணப்படுகிறது.
மாறாக நில அபகரிப்பு, மரபுரிமை அபகரிப்பு என்பவற்றிற்கு எதிராக தமிழ் மக்களை ஒரு பெரும் திரளாகத் திரட்டுவதற்கு அக்கட்சி விரும்பவில்லை. தவிர அவ்வாறு ஒரு பெருந்திரளைக் கூட்ட அவர்களால் மட்டும் முடியாது.அதற்கு ஏனைய கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.
மேற்கண்ட போராட்டங்கள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வரும் காலகட்டம் ஜெனிவா கூட்டத் தொடருக்குரியது. முன்னய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அண்மை ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
பக்க நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் நிதியும் குறைந்துள்ளதாக தெரிகிறது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு முக்கியமானது அல்ல என்ற அபிப்பிராயம் ஒப்பீட்டளவில் அதிகரித்து வருகிறது.
இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரைப்பற்றி அதிகம் பேசியது ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதியாகிய ஒரு பெண்தான்.
அவரைத் தவிர ஜெனிவாக் கூட்டத் தொடரைக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது. இத்தனைக்கும் ஐநா மனித உரிமைகள் அமைப்பானது சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவை நோக்கிய எதிர்பார்ப்பு முன்னுரைவிடக் குறைந்து விட்டது. இம்முறை ஐநா கூட்டத்தொடரானது ஏப்ரல் நான்காம் திகதியுடன் முடிவடைகின்றது.
கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில்தான் வெடுக்கு நாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டிருக்கிறது.கிண்ணியா வென்னீரூற்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, குருந்தூர் மலை….போன்ற இடங்களை தொல்லியல் திணைக்களம் கையாளும் விதம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதுபோலவே கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் ஜெனிவாக் கூட்டத் தொடரைக் குறித்து அலட்டிக் கொள்ளுமாக இருந்தால் கூட்டத்தொடர் நிகழும் காலகட்டத்திலேயே இவ்வாறான மரபுரிமை ஆக்கிரமிப்புகளை தொடர்வதற்கு அனுமதித்திருக்காது.
அதிலும் குறிப்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் தென்னாபிரிக்காவில் ஒரு முக்கியமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த காலகட்டமும் இது.
தென்னாபிரிக்காவின் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அந்நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுக்களைப் போன்ற கட்டமைப்புகளை இலங்கைத்தீவில் உருவாக்கும் நோக்கத்தோடும் வெளியுறவு அமைச்சரும் நீதி அமைச்சரும் தென்னாபிரிக்காவுக்குச் சென்றார்கள்.
அவர்கள் அவ்வாறு தென்னாபிரிக்காவில் நின்றிருந்த காலகட்டத்தில்தான் மேற்கண்ட மரபுரிமை ஆக்கிரமிப்புகள் தொடர்பான சர்ச்சைகள் மேலெழுந்தன.
மேலும் ஐ எம் எஃப்பின் உதவிகள் கிடைக்கத் தொடங்கிய ஒரு பின்னணிக்குள்தான் மேற்படி மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நிகழ்ந்தன.
அப்படியென்றால், ஐநா கூட்டத்தொடர்,ஐ. எம்.எப் உதவி, தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல்…. போன்ற செயற்பாடுகளை ஒருபுறம் முன்னெடுத்துக் கொண்டு, இன்னொருபுறம் மரபுரிமை ஆக்கிரமிப்புகளை அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளதா என்ற கேள்வி எழும்.
ஏற்கனவே எனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருந்தபடி, பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை மீட்பதற்கான உதவிகள் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதபடி பிணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தரப்பு மேற்கு நாடுகளில் நோக்கியும் ஐ எம்எப் போன்ற மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளை நோக்கியும் முன் வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு வலிமையாக முன்வைக்கப்பட்டு இருந்திருந்தால் ஐஎம்எப்பின் உதவி கிடைக்கும் ஒரு காலகட்டத்திலேயே மேற்கண்டவாறு அரசாங்கம் செயற்பட்டிருக்குமா?
பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுக்க முற்படும் ஐ எம் எஃப், உலக வங்கி,மேற்கு நாடுகள், இந்தியா, மற்றும் சீனா போன்றன பொருளாதார நெருக்கடியை ஒரு ராஜதந்திர வாய்ப்பாக பயன்படுத்துகின்றன என்றே தோன்றுகின்றது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர்கள் இதைப் பார்க்கவில்லையா? பொருளாதார நெருக்கடியை ஒரு ராஜதந்திர வாய்ப்பாகப் பயன்படுத்தி பிராந்தியப் பேரரசுகளும் உலகப் பேரரசுகளும் அவற்றின் நலன்களைப் பேணும் நிதி முகவர் அமைப்புகளும் இலங்கைத் தீவை எப்படித் தமது கடன் பொறிக்குள் வீழ்த்தலாம் என்று சிந்திப்பதாகவே தோன்றுகிறது.
ஐ.எம்.எப்பின் உதவிகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக இலங்கைத் தீவை நோக்கி நிகழ்ந்த அமெரிக்க மற்றும் இந்தியப் பிரதிநிதிகளின் வருகையும் அதைத்தான் உணர்த்துகின்றன.
2009க்குப் பின் இலங்கைத்தீவு ஒப்பீட்டளவில் வெளியுலகத்திடம் அதிகம் தங்கியிருந்த ஒரு காலகட்டமாக கடந்த ஆண்டையும் இந்த ஆண்டையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு வெளியுலக உதவிகளில் தங்கியிருந்த ஒரு சிறிய நாட்டை எப்படித் தங்களுடைய பிடிக்குள் கொண்டு வரலாம் என்றுதான் எல்லாப் பேரரசுகளும் சிந்திக்கின்றன. இதில் தமிழ் மக்களின் விவகாரம் ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்திருந்தால் அரசாங்கம் படையினரை ஆட் குறைப்பது பற்றியும், உயர் பாதுகாப்பு வலையங்களைக் குறைப்பது பற்றியும் திட்டவட்டமான முடிவுகளை எடுத்திருக்கும். ஆனால் அவ்வாறான முடிவுகளை எடுக்கத் தேவையான மக்கள் ஆணை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்று மேற்கு நாடுகளும் நம்புவதாகத் தெரிகிறது.
ஐ எம் எஃப், உலக வங்கி போன்றவற்றிடம் உதவி கேட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த ஒரு பின்னணியில், அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதாக ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தது.
ஆனால் தமிழ்த் தரப்பு விரும்பியோ விரும்பாமலோ புத்திசாலித்தனமாக முடிவெடுத்து அரசாங்கத்தின் பொறிக்குள் விழவில்லை.அதன்பின் இப்பொழுது தென் ஆப்பிரிக்காவின் நல்லிணக்கப் பொறிமுறையைப் பின்பற்றி உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஓர் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு அரசாங்கம் எத்தனிப்பதாகத் தெரிகிறது.
தென்னாபிரிக்கக் கள நிலவரமும் இலங்கைத் தீவின் களநிலவரவும் ஒன்றல்ல. தென்னாபிரிக்காவில் நீதிக்காகப் போராடிய கறுப்பின மக்களுக்கு அரசியல் நீதி கிடைத்து விட்டது.பொருளாதார நீதிதான் முழுமையாகக் கிடைக்கவில்லை.
கறுப்பின மக்களுக்கு அரசியல் ரீதியாக விடுதலை கிடைத்து விட்டது.எனவே அங்கே ஒரு நிலை மாற்றம் உண்டு.அந்தப் பின்னணிக்குள் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை அங்கே முன்னெடுப்பது ஒப்பீட்டளவில் பொருத்தமானது.
மேலும் அங்கே நல்லிணக்க முயற்சிகளுக்கு மண்டேலா என்ற ஒரு மகத்தான ஆளுமை தலைமை தாங்கியது.மண்டேலாவின் தலைமைத்துவத்தின் கீழ் தென்னாபிரிக்கா நல்லிணக்க முன்மாதிரி ஒன்றை உலகத்துக்கு நிரூபித்தது.
ஆனால் இலங்கைத் தீவின் அனுபவம் அத்தகையது அல்ல. இலங்கைத் தீவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்.ஆனால் அரசின் உபகரணங்களான திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றன. அதாவது இன ஒடுக்குமுறை வேறுவடிவங்களில் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே இலங்கைத்தீவில் நிலை மாற்றம் ஏற்படவில்லை.அதனால் நிலைமாறு கால நீதியைப் பற்றிச் சிந்திப்பது பொருத்தமற்றது. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பின் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோல்வியுற்று விட்டன என்று அச்செயற்பாடுகளில் பங்காளியாக இருந்த சுமந்திரன் வவுனியாவில் வைத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
தமிழ்க் கட்சிகளை ஜெனிவாவை நோக்கி ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியின் போது நடந்த சந்திப்பு அது.
அதுதான் உண்மையும்.நிலைமாறுகால நீதி எனப்படுவது இலங்கையில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது.
2015இல் இருந்து 2018 வரையிலுமான நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளின் விளைவாகத்தான் ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு தனிச் சிங்களப் பெரும்பான்மையை நோக்கி உழைக்கத் தொடங்கினார்கள்.இவ்வாறான தோல்விகரமான ஒரு முன் அனுபவத்தின் பின்னணியில்,மீண்டும் தென்னாபிரிக்க முன்மாதிரியைப் பின்பற்றப் போவதாகக் கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது?
ஐ எம் எஃப், உலக வங்கி போன்ற மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளிடம் கடனுக்காகத் தங்கியிருக்கும் ஒரு நாடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய பெயரில் மீண்டும் புதுப்பிக்க முற்படும் ஒரு நாடு, ஐநா கூட்டத் தொடரின் பின்னணியிலும், இரண்டு முக்கிய அமைச்சர்களின் தென்னாபிரிக்கப் பயணத்தின் பின்னணியிலும், ஐ எம். எஃபின் உதவிகள் கிடைக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்திலும், மரபுரிமை ஆக்கிரமிப்புக்களை நிறுத்தவில்லை என்று சொன்னால் அது எதைக் காட்டுகின்றது?
அரசாங்கத்தைப் பிணையெடுக்கும் முயற்சிகளும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் ஒன்றிலிருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதபடி பிணைக்கப்படவில்லை என்பதையா?
-நிலாந்தன்-