டெல் அவிவ் கடற்கரைக்கு அருகில் கார் மோதியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இத்தாலிய சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் இத்தாலிய பிரஜை அலெஸாண்ட்ரோ பரினி என இஸ்ரேல் அடையாளம் கண்டுள்ளதாக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு உலாவுப் பாதையின் அருகே கவிழ்ந்த கார் மற்றும் ஒரு இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டியது.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிரித்தானிய-இஸ்ரேலிய சகோதரிகள் கொல்லப்பட்டது மற்றும் அவர்களின் தாயார் காயமடைந்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 21:25 மணிக்கு டெல் அவிவ் நகரின் கடற்கரை ஓரத்தில் கியா காரை ஓட்டிச் சென்ற 45 வயது நபர், சார்லஸ் க்ளோர் கார்டனின் புல்வெளியில் கவிழ்வதற்கு முன்பு, பல பாதசாரிகளைத் மோதி தாக்கினார்.
அருகாமையில் இருந்த பெட்ரோல் நிரப்பும் இடத்தில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி, சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கார் ஓட்டுநர் துப்பாக்கி போன்ற பொருளை அடைய முயற்சிப்பதைக் கண்டு தடுக்க முயற்சித்த போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில், மூன்று பேருக்கு மிதமான காயங்கள் ஏற்பட்டதாகவும், நான்கு பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி,இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று விபரித்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பொலிஸ் மற்றும் ராணுவப் பாதுகாப்புப் படையினரை திரட்டியதாக, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், நெதன்யாகு மேற்குக் கரையில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தையும் பார்வையிட்டார்.